தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில், முதன்மை கவனம் பெற்ற தொகுதியாக கோவை தெற்கு தொகுதியை கூறலாம். ஏனெனில், அத்தொகுதியை வலியுறுத்தி, அதிமுகவிடம் கேட்டு வாங்கியது பாஜக.

எதிர்பார்த்தபடியே, வானதி சீனிவாசம் களமிறக்கப்பட்டார். அத்தொகுதியில், கமலஹாசனும் களமிறங்கவே, தொகுதியின் மீதான கவனம் இன்னும் கூடியது.

இந்நிலையில்தான், உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், வானதியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தார். அந்த சமயத்தில், பாஜக உள்ளிட்ட சங்பரிவார ஆட்கள், கோவை மாநகரில் செய்த அட்டூழியம் மறக்க முடியாதது. பேருந்துகளை மறித்தது, கடைகளின் மீது கல் வீசியது உள்ளிட்ட பல ரகளைகளை அரங்கேற்றினர்.

இதனால், மக்கள் பாஜகவை வெறுத்துவிடுவார்கள்; அத்தொகுதியில் பாஜக படுதோல்வி அடையும் என்று பலரால் கணிக்கப்பட்டது. மறுபுறம் பாஜகவின் ‘பி டீம்’ என்று வர்ணிக்கப்பட்ட கமலஹாசன் நின்றார். மற்றொருபுறம் காங்கிரஸ் வேட்பாளர்.

காங்கிரஸ் சார்பாக, பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் சுணக்கம் காட்டப்படுவதாக வந்த தகவல்களையடுத்து, கோவை வன்முறையை கண்டித்த கமல் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், வன்முறை அட்டகாசங்களை மீறி, பாஜக, கோவை தெற்கில் வென்றுள்ளது. ஆக, இதன்மூலம் தனது ஸ்டைல் தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் என்ற ஒரு படிப்பினை அக்கட்சிக்கு கிடைத்துள்ளதா? இத்தகைய அதன் போக்கை, வரும் காலங்களிலும் அக்கட்சி தமிழ்நாட்டில் தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.