டெல்லி: இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இதைத்தொடர்ந்து, இந்திய மசாலா பொருட்களுக்கு  சர்வதேச அளவில் தடை விதிக்கும் நடவடிக்கைகள்  முடுக்கி விடப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரபல இந்திய மசாலா பிராண்டுகளான MDH மற்றும் EVEREST நிறுவனத்தைச் சேர்ந்த  சில தயாரிப்புகளில் காணப்படும்  மூலப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுதொடர்பாக  உணவு கட்டுப்பாட்டாளர்கள் கவலைகளை எழுப்பியதையடுத்து, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் அதன் தயாரிப்புகள் தடைசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய மசாலா பொருட்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உண்டு. இதனால், இந்திய மசாலா பொருட்கள்  சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய மசாலா பொருட்களில் ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை உடையாது என உணவு ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படி, எம்டிஹச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் 4 மசாலா பிராண்ட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் உணவில் சேர்த்து கொண்டால் நீண்ட கால அடிப்படையில் ஆபத்து ஏற்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என கூறப்படுகிறது.

எம்டிஹச் Curry Powder, Mixed Masala Powder, Sambhar Masala மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் Fish Curry Masala ஆகியவற்றில் உள்ள மூலப்பொருள் நச்சுத்தன்மை உடையது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள்  இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இவற்றுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் உள்ள உணவுப்பொருள் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உடனடியாக கடைகளில் இருந்து மேற்குறிப்பிட்ட மசாலா பாக்கெட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நச்சுப் பொருள் இருப்பதாக கூறப்படும் மசாலா பாக்கெட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தோடர்ச்து, மேலும், பல்வேறு நாடுகளும் இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, உணவுப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு சரியான வழிகாட்டுதல்களை அமல்படுத்தி, அவற்றை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில்,  சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் எவரெஸ்ட் தனது தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அந்நிறுவனம்  மறுத்துள்ளது. இரு பிராந்தியங்களிலும் உணவு கட்டுப்பாட்டாளர்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து அனைத்து உற்பத்தி அலகுகளிலிருந்தும் மசாலா மாதிரிகளை சேகரிக்க இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இந்திய மசாலாப் பொருட்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.