ஜம்மு:
காஷ்மீரில்  கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை அடுத்து, அனைத்துக்கட்சி குழு தலைவர்கள் இன்று காஷ்மீர் பயணம் செய்கின்றனர்.
கடந்த ஜூலை 8ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து  2 மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகின்றனர்.
1kasmir-1
இதையடுத்து அங்கு அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. டெல்லியில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் காஷ்மீர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசித்தார். அப்போது காஷ்மீருக்கு அனைத்து கட்சிக் குழுவை அனுப்பி, நிலவரத்தை நேரில் அறிந்து அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் குழு காஷ்மீருக்கு செல்கிறது. முன்னதாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காஷ்மீர் பயணம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.  அப்போது காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் செல்லும் அனைத்து கட்சி தலைவர்கள் குழுவினர், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுகின்றனர். ஸ்ரீநகரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். மேலும், அனைத்து கட்சி தலைவர்கள் குழு, காஷ்மீர் கவர்னர் வோராவையும், முதல்வர் மெகபூபாவையும் சந்தித்து பேச உள்ளனர்.
ராஜ்நாத், ஜெட்லி தலைமையில் செல்லும் இந்த குழுவில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி, முஸ்லிம் லீக் கட்சியின் இ.அகமது, அதிமுக எம்.பி. பி.வேணுகோபால், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்பட 28 பேர் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று காஷ்மீர் செல்கின்றனர்.