அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சி நகரில் உள்ள ஹோபோகன் ஷாப்ரைட் என்ற கடாயில் அவர்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

20 மற்றும் 21 வயதுடைய இளம் பெண்கள் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பொருட்களுக்கு மட்டும் பணம் செலுத்தி விட்டு USD 155 மதிப்புடைய 27 பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் திருடிச் சென்றதாக காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் கைது செய்ததை அடுத்து, அந்தப் பொருட்களுக்கான இரண்டு மடங்கு பணம் செலுத்துவதாகவும், ஏற்கனவே வாங்கிய பொருளுக்கும் அதிக பணம் செலுத்துவதாகவும் கூறினர்.

பணத்தை ஏன் முன்னதாக கொடுக்கவில்லை என்று காவல்துறையினர் விசாரித்த போது, தங்களிடம் போதுமான பணமில்லை என்று ஒரு மாணவியும் மற்றொரு மாணவி சில பொருட்களுக்கு பணம் கொடுக்க மறந்து விட்டதாகவும் கூறினார்.

கடையில் பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் சென்றது திருட்டுக் குற்றம் என்று கூறிய போலீசார் அவர்களை கைது செய்ததோடு இனி இந்த கடைக்குள் நுழையமாட்டோம் என்று எழுதிக் கொடுக்கச் செய்தார்கள்.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை திருடியதாக இரண்டு இந்திய மாணவிகள் கைது செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து அது வைரலாகி வருகிறது.