13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘மணிகன்ட்ரோல்’ இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, டெல்லி, உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 257 மக்களவைத் தொகுதிகளில் 238 இடங்களில் வெற்றி பெற்றது”

ஆனால், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் கனவில் உள்ள பாஜக-வுக்கு இந்த 13 மாநிலங்களில் கடந்த தேர்தலைப் போல் வெற்றிவாய்ப்பு இல்லை அதேவேளையில் வெற்றிக்கான வாய்ப்பை மேம்படுத்த எள்ளளவும் வாய்ப்பில்லை” என்று ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தேர்தல் கணிப்பாளருமான பிரதீப் குப்தா கூறியுள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளில், ஆக்சிஸ் மை இந்தியா இரண்டு மக்களவைத் தேர்தல்கள் உட்பட 69 கருத்துக் கணிப்புகளைச் செய்துள்ளது இதில் 64 கருத்துக்கணிப்பு சரியாக இருந்ததை அடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரதீப் குப்தாவின் இந்த கணிப்பு பாஜக-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த 13 மாநிலங்கள் தவிர 2019 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, அசாம் மற்றும் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 185 இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 109 இடங்களை வென்றது.

இம்முறை இந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கணிசமான இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதை அடுத்து பாஜக-வுக்கு சில இடங்கள் குறையும் என்று கூறியுள்ளார்.

தவிர, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக தாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் என்று கூறிக்கொள்ள ஏதும் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நோக்கங்கள் மக்கள் மத்தியில் வெகுவாக சென்று சேர்ந்திருப்பதும் பாஜக-வின் மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் கனவை கலைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.