பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘விசித்திரன்’. இது தமிழ்நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சில தனியார் மருத்துவமனை செய்யும் கொடூர செயல்பாடுதான் படத்தின் கதை.

அதாவது கிட்னி, கல்லீரல் போன்றவை செயல்படாத நபருக்கு, மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்பைப் பொறுத்துவார்கள். இதற்கு அரசு ஒரு பட்டியல் தயாரிக்கும். இதில் பதிவு செய்திருப்பவர்களுக்கு வரிசைப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்கும்.

‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அதற்கான பட்டியலில் இருக்கும் ஏழைகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ததாக ‘சும்மா’ உடலை அறுத்து மீண்டும் தைத்து விடுகிறார்கள்.

ஆனால் உண்மையில், பட்டியலில் இல்லாத பணக்கார நோயாளிகளுக்கு அந்த உறுப்புகளைப் பொறுத்துகிறார்கள்.

தவிர அப்பாவிகளை கொலை செய்து, அவர்களின் உறுப்புகளை பணக்காரர்களுக்கு பொறுத்தி சம்பாதிக்கிறார்கள்’ என்கிறது ‘விசித்திரன்’ படம்.

சில தனியார் மருத்துவமனைகளின் இந்த கொடூரத்தை, நாயகன் ஆர்.கே.சுரேஷ் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பதே, ‘விசித்திரன்’ படத்தின் கதை!

இப்படி நிஜத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாட்டில் அம்பலத்துக்கு வந்தது.

இரட்டை லீஃப் ஆட்சி காலத்தில், முதன்மை பெண்மணியின் தோழி, முழு அதிகாரத்தோடு வலம் வந்தார்.

முதன்மையுடன் தோழி வாழ.. தோழியின் கணவர் தனியே வாழ்ந்தார். ஆனாலும் தானும் ஒரு அதிகார மையம் என சொல்லி வந்தார்.

இலக்கிய இதழ் நடத்தியது உள்ளிட்ட மிகச் சில பாசிடிவான பக்கம் அவருக்கு உண்டு.

ஆனால் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டராகவே அறியப்பட்டார். அவரிடம் சிக்கி, ஒரு இளம் பெண் சின்னாபின்னம் ஆனது ஒரு உதாரணம்.

அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை சரியாக செயல்படவில்லை. ஆகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இவற்றைப் பொருத்திக்கொள்ள நினைத்தார்; தலைநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

இந்த நிலையில், காவிரிப்படுகை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கினார் இளைஞர் ஒருவர், அவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டே நாளில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டது.

அவரது உடல், தலைநகரத்துக்கு – அந்த அதிகாரமைய பிரகமுர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு – எடுத்து வரப்பட்டது.

இளைஞரின் உறுப்புகள், அதிகாரமைய பிரமுகருக்கு மாற்றப்பட்டது.

இந்த உண்மைச் சம்பவம், அப்போது பல அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி தமிழ்நாட்டையே அதிரவைத்தது.

@ அதிகாரப் பிரமுகருக்கு, அந்த இளைஞரின் உறுப்புகள் மாற்றப்பட்டது உண்மை. ஆனால் மருத்துவமனை குறிப்பேட்டில் அவரது பெயர் இல்லை. ‘70 வயது நபருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை நடந்தது’ என்று மட்டுமே இருந்தது. இது ஏன்?

@ விபத்தில் சிக்கிய இளைஞர், காவிரிப் படுகையில் இருக்கும் மருத்துவமனையில் தானே மூளைச்சாவு அடைந்தார். அங்கேயே உறுப்புக்காக பல நோயாளிகள் – ஏழைகள் -காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், காவிரி படுகை மாவட்டத்தில் இருந்து, அந்த இளைஞரின் உடல் தலைநகருக்கு கொண்டு வரப்பட்டது ஏன்?

@ மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைத்தான் எடுத்துச் செல்வார்கள். ஆனால் இளைஞரின் முழு உடலையும் கொண்டு வந்தது ஏன்?

@ அந்த இளைஞர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டே நாட்களில், அந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டதே. அவர் வேண்டுமென்றே மூளைச்சாவு நிலைக்கு ‘தள்ளப்பட்டாரா’?

@ இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அந்த விபத்தே சந்தேகத்தை எழுப்புகிறதே?’ என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

தேசிய தலைவரின் தமிழக தலைவராக இருந்த மருத்துவர் ஒருவரும் இதே கேள்விகளை எழுப்பினார். இந்த சர்ச்சை, நாட்டையே அதிரவைத்தது.

உண்மையில் தமிழ்நாட்டில் நடந்த அந்த சம்பவம் அச்சு அசலாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது, ‘விசித்திரன்’ படத்தில்.

நிஜத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அவ்வளவ ஏன், குற்றம் சாட்டப்படக் கூட இல்லை!

படத்தில், நாயகன் எப்படி துப்பறிகிறார், குற்றவாளிகளை எப்படி சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்நிலையில் நமக்கு, புதிதாக எழும் கேள்வி, இதுதான்.

நிஜ சம்வத்தில், அந்த அதிகாரப் பிரமுகருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது அல்லவா. எந்த அப்பாவிக்கு பொறுத்துவதாகச் சொல்லி ஏமாற்றி இந்த அதிராக பிரமுகருக்கு பொறுத்தினார்கள். அந்த அப்பாவி எங்கே இருப்பார்?

தவிர, தமிழ்நாட்டிலேயே பரபரப்பாக பேசப்பட்ட நிஜ சம்பவம், மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு, தமிழில் விசித்திரன் என்ற தலைப்பில் வந்திருக்கிறதே. தமிழ்நாட்டில் எவரும் எடுக்கவில்லையே!

விசித்திரம்தான்!

– டி.வி. சோமு