துபாய்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்து உள்ளது. ஏற்கனவே பல பிரபலங்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுபவர்கள் பத்தாண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.  இந்த கோல்டன் விசா, சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாணவர்கள் உள்ளிட்டோருக்கும்  வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், தற்போது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின்போது, அவர்களுடன் மலையாள தொழிலதிபர் எம். ஏ யூசுப் அலி இருந்தார். யூசப் அலி அதற்கான நடைமுறைகளை அண்மையில் முடித்ததாக சொல்லப்படுகிறது.

விசாவை வாங்கிக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து, இந்த விசாவை வாங்குவதில் பெருமை கொள்வதாக பேசினார். அதற்கான நடைமுறைகளை கையாண்ட யூசப் அலிக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். துபாய் சென்று இருந்த ரஜினிகாந்த் அங்கு முதன்முறையாக கட்டப்பட்டு இருக்கும் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயில் மற்றும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி ஆகியவற்றிற்கு சென்று பார்வையிட்டார்.

ரஜினிகாந்த் யூசப் அலியுடன் இணைந்து பயணம் செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஐக்கிய அமீரகத்திற்கு சென்ற ரஜினிகாந்த், முதற்கட்டமாக கோல்டன் விசா வாங்கிகொண்டு, அதன் பின்னர் யூசப் அலியின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக மதிய உணவு அருந்தினர். அதன் பின்னர் இருவரும் சில மணி நேரங்களை ஒன்றாக கழித்தாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமா ஹீரோ ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் அவரது 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப்படத்திற்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.  இந்தப்படத்தின் டைட்டில் வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏற்கனவே  நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக் கான், மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான் கமல்ஹாசன், ஆர்.பார்த்திபன், விஜய் சேதுபதி, விக்ரம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, ஜோதிகா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பின்னணி பாடகி சித்ரா ஆகியோரும் கோல்டன் விசாக்களை பெற்றுள்ளனர்.