சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இறுதிநிலவரம் வெளியாகி உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட பெண் எம்எல்ஏக்களில் 11 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இது கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு மிகக்குறைவு என்பது தெரிய வந்துள்ளது.

திமுக,  அதிமுக போன்ற பிரதான தமிழக அரசியல் கட்சிகள் பெண்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்காததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக தலைவராக மறைந்த ஜெயலலிதா வந்தபிறகு, பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 24 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பிறகு நடைபெற்ற 2006 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 22 பெண்கள் எம்எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதுபோல 2011 சட்டமன்ற தேர்தலில் 17 பெண்களும், 2016 சட்டமன்ற தேர்தலில் 21 பெண் எம்எல்ஏக்களும் வெற்றிவாகை சூடி தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்தனர்.

ஆனால், தற்போது நடைபெற்ற (2021) சட்டமன்ற தேர்தலில்  நாம் தமிழர் கட்சி மட்டுமே 50 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியது. திமுகவில் எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அதிமுகவில்  ஜெயலலிதா இருந்தேபோது, பெண்களுக்கு வழங்கப்பட்டதை விட குறைவான இடங்களே வழங்கப்பட்டது.

ஆனால்,  இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களில் 1,069 பேர் பெண்கள். இதில் பல சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக போட்டியிட்டவர்களில் 11 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.

இது கடந்த 2000க்குப் பிறகு மிகக்குறைந்த அளவிலான எண்ணிக்கை என்றும்,  234 உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழக சட்டப்பேரவையில் 4.70% மட்டுமே என்று கூறப்படுகிறது.

பெண்களின் உரிமையை போற்றும் திராவிட கட்சிகள், பெண்களுக்கு சட்டமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.