சென்னை

பிரபல ஊடகவியலர் சா சி சிவகுமார் முகநூலில் தாம்சயாம் மரண ரயில் பாதைக்கு சென்று வந்ததை குறித்து பதிவிட்டுள்ளார்.

பிரபல ஊடகவியலர் சா சி சிவகுமார் தனது முகநூல் பக்கத்தில்,

“அதோ தெரிகிறதே, அந்த ரயில் பாதை தான் ‘சயாம் மரண ரயில் பாதை’ என்றார் நண்பர் சுந்தரக்குமார். இவர் என் பள்ளி தோழர், இப்போது தாய்லாந்து தமிழ்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். உடன் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.

வரலாற்று ஆர்வலர்களுக்கும், புத்தக வாசிப்பாளர்களுக்கும் அறிமுகமானது இந்த ‘சயாம் மரண ரயில் பாதை’.

இதையொட்டி நடைபெறுகிற நிகழ்ச்சிக்கு தான் தமிழக அரசின் பிரதிநிதியாக என்னை அனுப்பி வைத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தாய்லாந்து தலை நகர் பாங்காக்கில் இருந்து இரண்டு மணி நேர பயணம் காஞ்சனபுரி. போகும் வழியில் காஞ்சனபுரி அருகே தான், அந்த மரண ரயில் பாதையை கண்டோம்.

அது இரண்டாம் உலகப் போர் காலம். ஜப்பான், ஆங்கிலேயர் வசம் இருந்த பர்மா நாட்டை கைப்பற்றியது. இப்போதைய மியான்மர் நாடு தான் பழைய பர்மா. பர்மாவிற்கு தாய்லாந்து நாட்டு வழியாகத் தான் நுழைந்திருந்தது ஜப்பான். தங்கள் படைகளை தொடர்ந்து பராமரிக்க, ஜப்பானியர் அந்தமான் கடல் வழியாக செல்ல வேண்டி இருந்தது. அது பாதுகாப்பானதாக இருக்கவில்லை.

அதற்கு மாற்று வழி தேடியது. ஏற்கனவே இங்கிலாந்து அரசு சிந்தித்து, கைவிட்டிருந்த திட்டத்தை கையில் எடுத்தது. அது தான் தாய்லாந்து – பர்மா இடையிலான ரயில் பாதை. அப்போது தாய்லாந்துக்கு பெயர் ‘சயாம்’. மலை, காடு, ஆறுகள் என மிக சிரமமான நிலப்பரப்பில் ரயில் பாதை அமைப்பது என்பது சாமானியமானது அல்ல. ஆனால் ஜப்பான் நாட்டின் பேராசை திட்டத்தை துவங்க வைத்தது.

இன்னொரு திட்டமும் ஜப்பானுக்கு இருந்தது. அந்த ரயில் பாதை மூலம் இந்தியா வரை வந்து, ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியாவையும் கைப்பற்றுவது. அப்போது சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் உடன் தொடர்பில் இருந்தார்.

ரயில் பாதை திட்டம் துவங்குவது சரி, எப்படி செயல்படுத்துவது. அப்போது கனரக இயந்திரங்கள் கிடையாது. மனித உழைப்பின் மூலமே செய்ய முடியும். தங்களிடம் இருந்த போர்கைதிகளை கொண்டு வந்து இறக்கியது ஜப்பான். அதில் ஆங்கிலேயர், ஆஸ்திரேலியர் உள்ளிட்ட பல நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

இன்னும், இன்னும் ஆட்கள் தேவைப்பட்டனர். அப்போது மலேசிய தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். மனோகரா திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எழுதிய வசனம் போல், “அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டனர்”, என்றே சொல்ல வேண்டும். அப்போது மலேசியாவும், சிங்கப்பூரும் ஜப்பான் வசம் இருந்தன.

தமிழகத்தில் இருந்து 18ஆம் நூற்றாண்டில் தோட்ட வேலைக்கு மலேசியாவுக்கு சென்றவர்கள் தான் இந்த மலேசியத் தமிழர்கள். இவர்களோடு மலேயர்களும், சயாமியர்களும் இழுத்து செல்லப்பட்டனர்.

கொடூரமான நிலப்பரப்பில் பணி. அதிக நேர உழைப்பு, சரியான உணவு கிடையாது, விலங்குகள் தாக்குதல் என உயிரிழப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் அது குறித்தெல்லாம் கவலை இல்லாமல், தனது திட்டப்படி ரயில் பாதை அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தது ஜப்பான்.

இப்படி பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மூன்று லட்சம் பேர் என்றும், அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் என்றும் ஆஸ்திரேலிய அரசு புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. இதில் ஆசியத் தொழிலாளர்கள் 90,000 பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானோர் மலேசியத் தமிழர்கள்.

இதில் உயிரிழந்த ஆங்கிலேயர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படுள்ளது. மற்ற நாட்டவர்களும் அமைத்துள்ளனர். உயிரிழந்த பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஒர் நினைவுச் சின்னம் இல்லாத குறை இருந்தது.

அதனை தாய்லாந்து தமிழ் சங்கத்தினர், நம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனே நம் முதல்வர் தளபதி அவர்கள், பத்து லட்ச ரூபாய் ஒதுக்கி, உயிரிழந்த தமிழர்களின் நினைவாக “நடுகல்” தயார் செய்ய உத்தரவிட்டார். அந்த நடுகல் திறப்பு விழா, நாளை காஞ்சனபுரியில் நடைபெற உள்ளது.

விழாவிற்கு செல்லும் வழியில் தான் அந்த “மரண ரயில்” பாதையை கண்டோம். குவே நதி மீது பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது இந்த ரயில் பாதை. இப்போதும் வற்றாமல் ஓடும் நதி. 1942களில் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் குவே நதி. அதில் எந்த நவீன உபகரணங்களும் இன்றி கான்கிரீட் சுவர் அமைத்திருப்பதை நினைத்தாலே நெஞ்சை கவ்வுகிறது. எத்தனை உயிர்களை இந்த பாலம் பலி கொண்டிருக்கும் என்ற எண்ணம் தான் மனதில் ஒலிக்கிறது.

தமிழர் தம் தியாகத்தை காலமெல்லாம் சொல்லும் இந்த நடுகல் !”

என்று பதிவிட்டுள்ளார்.