இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய ஹை-கமிஷனர் நடத்திய இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு, பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய கெடுபிடிகள் இதற்கு முன்னர் இருந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. செரெனா ஹோட்டலில், இந்திய ஹை-கமிஷனர் அஜய் பைசாரியா இஃப்தார் விருந்தளித்தார். அந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு பாகிஸ்தானின் பல பகுதிகளில் வாழும் குறிப்பிட்ட நபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், விருந்து நாளன்று, செரெனா ஹோட்டலை சுற்றி வழக்கத்திற்கு மாறாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விருந்தினர்கள் இதனால் தேவையற்ற தொந்தரவுக்கு ஆளாயினர். சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

அதேசமயம், அழைப்பிதழ் மற்றும் அடையாள ஆவணங்கள் வைத்திருந்த விருந்தினர்கள், எந்தவிதப் பிரச்சினையுமின்றி விருந்து நடந்த ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்று ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார்.

ஆனால், அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த சிலருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், அவர்கள் விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறியதாயும் தகவல்கள் தெரிவிக்கின்றன.