குண்டூர்:

னது தந்தை ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன் என்று ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார். மேலும் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஒருபோதும் தப்ப விட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லோச்கசபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தை  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி  சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி இஸ்லாமியர்களுடன் இணைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் அவர்களுடன் இணைந்து உணவு அருந்தினார்.

பின்னர் பேசிய அவர், ‘இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவன் பல அழகான கதைகளை எழுதுவார். அதற்கு எடுத்துக்காட்டாக நான் ஒரு கதை கூறுகிறேன்.

2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சூழ்ச்சி செய்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 எம்.எல்.ஏ.க்களையும், 9 எம்.பி.க்களையும் விலைக்கு வாங்கினார்.

ஆனால் இந்த வருடம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களையும், மக்களவைத் தேர்தலில் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இறைவன் இயற்றிய இந்த கதையை விட யாராலும் சிறந்த கதையை எழுத முடியாது’ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் தனது தந்தையை போன்று ஆந்திர மாநிலத்திற்கு சிறந்த ஆட்சியை வழங்க முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், ஊழல் புரிந்த குற்றவாளிகளை ஒருபோதும் தப்பவிடமாட்டோம் என உறுதி அளித்தார்.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ஆந்திராவில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த  தடையை நீக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது.