டெல்லி: நீட் தேர்வு விஷயத்தில் ‘அதிகாரிகள் பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது’, தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது சோகமானது என உச்சநீதிமன்றம், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது.

மே 3-ம் தேதி நடந்த 2026 நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு புகாரால் மே 12 அன்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுதாள் கசிவு விவகாரத்தில், என்டிஏ அதிகாரிகளே முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வை நடத்தும், என்.டி.ஏ-வை முழுமையாக மறுசீரமைக்கக் கோரியும் ‘அகில இந்திய மருத்துவக் கழகங்களின் கூட்டமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் தன்வி துபே மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேசிய தேர்வு முகமையை முழுமையாக மாற்றிமைக்க வேண்டும், அதன் கட்டமைப்பை அடிப்படையிலே சீரமைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் மேற்பார்வையில் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டு உள்ளது.
முன்னதாக, மே 3 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததை அடுத்து, தேர்வு நடந்த 9 நாட்களிலேயே (மே 12) தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. 2016-ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேர்வு நடத்தப்பட்டு முழுமையாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த ரத்து அறிவிப்பு டெல்லி, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாணவர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. தேர்வு எழுதிய 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கனவுகளை அரசு சிதைத்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இந்தத் தேர்விற்கு சுமார் 22.7 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 22.05 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை, நீதிபதி பி.எஸ். நரசிம்மா மற்றும் நீதிபதி அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அனைத்து மனுக்களின் நகல்களையும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தன்வி துபே மற்றும் டாக்டர் சாரு மாத்தூர் ஆஜரானார்கள்.
மனுதாரர் வழக்கறிஞர்கள், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை மிகவும் வலுவான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாகப் புதிய அமைப்பைக் கொண்டு வர வேண்டும். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர், சைபர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் தடயவியல் விஞ்ஞானி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, 2026 நீட் மறுதேர்வை அதன் மேற்பார்வையில் நடத்த வேண்டும். தேசிய தேர்வு ஒருமைப்பாட்டு ஆணையம் முறைப்படி அமைக்கப்படும் வரை இக்குழு தற்காலிகமாகச் செயல்பட வேண்டும்.
2024 நீட் விவகாரத்திற்குப் பிறகு, தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளைத் தேர்வு நடத்தும் அமைப்பு கண்டிப்பாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இதற்கு பதில் கூறிய நீதிபதி நரசிம்மா வாய்மொழியாக, இந்த விஷயத்திற்காக “நாங்கள் மிகவும் வருந்துகிறோம், அவர்கள் (NTA) பாடம் கற்றுக்கொள்ளவில்லை.” பாடங்கள். பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு குழுவை அமைக்குமாறு நாங்கள் ஒரு உத்தரவைப் பிறப்பித்தோம், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது

இந்த விவகாரத்தில் சிறிய அவசரம் உள்ளது. அடுத்த தேர்வுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நாங்க இப்போது தேர்வு தேதியைப் பற்றிப் பேசவில்லை (தேர்வு முறையைச் சீரமைப்பதே முக்கியம்) என்று நீதிமன்ற பெஞ்ச் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய தேர்வு முகமை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இதனுடன் இணைத்து உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கும் என கூறியது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் சுணக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் தனது கடுமையான கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. நீதிமன்றம் விரிவான வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று தோன்றவது வருத்தமளிக்கிறது என்றும் நீதிமன்ற பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமை மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஆகியோர் தங்களது பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு செயல்முறையை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் எந்த அளவிற்குப் பின்பற்றப்பட்டு உள்ளன என்பது குறித்த விரிவான விளக்கங்கள் பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது.
NTA-ஐ மாற்றக் கோரி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், நீட் தேர்வு முறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, நீதிமன்றத்தின் 2024 தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை NTA-யிடம் கோரியது.
[youtube-feed feed=1]