இருமல் சிரப் உள்ளிட்ட சிரப் வகை மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், பொதுமக்களின் உடல்நலப் பாதுகாப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இனி மருத்துவரின் பரிந்துரை சீட்டு (Prescription) இருந்தால் மட்டுமே இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளை மருந்தகங்களில் வாங்க முடியும். இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் திருத்தம் செய்து, இதுவரை ‘ஷெட்யூல்-கே’ பட்டியலில் இடம்பெற்றிருந்த இருமல் சிரப்புகள் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நேரடியாக இருமல் சிரப் விற்பனை செய்வதற்கு இனி அனுமதி இல்லை.

இந்த விதிமுறையை மீறி மருந்தகங்கள் இருமல் சிரப்புகளை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட மருந்தகத்தின் உரிமம் (லைசன்ஸ்) மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக சில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குறிப்பிட்ட வகை இருமல் சிரப்புகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இதனால் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

மேலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]