ரஷ்யாவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறி குஜராத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலித்த முகவர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் மற்றும் வடோதரா பகுதிகளைச் சேர்ந்த இந்த இளைஞர்களிடம், ரஷ்யாவில் பேக்கிங் மற்றும் தையல் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும் என்றும், நல்ல ஊதியம் வழங்கப்படும் என்றும் பெட்லாட் பகுதியைச் சேர்ந்த ரிப்பல் படேல் என்பவர் உறுதியளித்திருந்தார்.

இதனை நம்பி ரஷ்யா சென்ற இளைஞர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை கிடைக்கவில்லை. போதுமான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படாததால் அவர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர குஜராத் மாநில அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரிப்பல் படேலை ஆனந்த் மாவட்ட உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், இதற்கு முன்பும் 13 பேரை இதேபோன்று ஏமாற்றி ரஷ்யாவுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர்களும் பின்னர் பல்வேறு சிரமங்களை சந்தித்து நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக குஜராத் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், பங்கு முதலீட்டு மோசடி மூலம் ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.1.06 கோடி பறிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ.1.06 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
லக்கன் லால் உய்கே என்ற ஓய்வுபெற்ற அதிகாரியை, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண் தொடர்புகொண்டு முதலீட்டு நிறுவன பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவரை முதலீட்டு ஆலோசனை வழங்கும் குழுவில் இணைத்தார்.
அந்தக் குழுவில், பங்கு வர்த்தகம் மற்றும் ஐபிஓ முதலீடுகள் மூலம் தினமும் 10 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என கூறப்பட்டது. இதனை நம்பிய உய்கே, தன்னுடைய செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து முதலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். செயலியில் அதிக லாபம் கிடைத்ததாக காட்டப்பட்டதால் அவர் மேலும் பணம் முதலீடு செய்தார்.
பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி கும்பல் பலரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது. பின்னர் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முயன்றபோது, மேலும் பணம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டபோது, மோசடி கும்பலின் அனைத்து தொலைபேசி எண்களும் செயலிழந்திருந்தன. விசாரணையில், 100-க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள், போலி முதலீட்டு செயலிகள் மற்றும் பல வங்கி கணக்குகள் மூலம் இந்த மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]