இங்கிலாந்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கும்பல்களால் சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்களை பிரிட்டிஷ் எம்.பி. ரூபர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பல பகுதிகளில் செயல்பட்டதாக கூறப்படும் இந்த “கும்பல்கள்” சிறுமிகளை குறிவைத்து பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திய ரூபர்ட் லோவ், உயிர் தப்பிய பெண்களின் சாட்சியங்களை நாடாளுமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.

அதில், 12 மற்றும் 13 வயதிலேயே பல்வேறு கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். ஒருவர், “மூன்று ஆண்டுகளில் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண், 15 வயதில் கடுமையான தாக்குதலுக்கு ஆளான பின்னரும் மருத்துவமனையில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். சிலர் காவல்துறையினரே தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களின்படி, கும்பல் உறுப்பினர்கள் வெள்ளையின மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளை குறிப்பாக குறிவைத்து தாக்கியதாகவும், தங்களது செயல்களுக்கு இன மற்றும் மத அடிப்படையிலான காரணங்களை கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூபர்ட் லோவ் மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வில், இங்கிலாந்தின் குறைந்தது 85 பகுதிகளில் இதுபோன்ற குழு அடிப்படையிலான குழந்தைகள் பாலியல் சுரண்டல் நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குற்றவாளிகள் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் முதன்முதலில் யார்க்ஷையரில் உள்ள ரோதர்ஹாம் நகரில் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கு 1997 முதல் 2013 வரை சுமார் 1,400 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக 2014-ம் ஆண்டு வெளியான அறிக்கை தெரிவித்தது. பின்னர் ரோச்டேல், ஆக்ஸ்போர்டு, டெல்போர்டு, பிரிஸ்டல் உள்ளிட்ட பல நகரங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் 2023-ம் ஆண்டு மட்டும் குழந்தைகளுக்கு எதிரான 1.15 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4,228 வழக்குகள் குழு அடிப்படையிலான குற்றங்களாக இருந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]