பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையையும், தங்கத்தேர் இழுக்கும் கட்டணத்தையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகளை குறிப்பிட்ட தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பக்தர்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்லும் பஞ்சாமிர்தத்தின் தயாரிப்பு செலவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தற்போது ரூ.45க்கு விற்கப்படும் அரை கிலோ டின் பஞ்சாமிர்தத்தின் விலையை ரூ.60 ஆகவும், ரூ.40க்கு விற்கப்படும் மற்றொரு வகை பஞ்சாமிர்தத்தை ரூ.50 ஆகவும், ரூ.20க்கு விற்கப்படும் 200 கிராம் பஞ்சாமிர்த டப்பாவை ரூ.30 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு கோவில் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. விலை உயர்வு குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளை ஜூலை 7-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோல், பழனி மலைக்கோவிலில் தினமும் இரவு நடைபெறும் தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்து கொண்டு தேர் இழுக்கும் பக்தர்களிடம் தற்போது ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் கடந்த 2011 முதல் மாற்றமின்றி இருந்து வருகிறது.

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, தங்கத்தேர் புறப்பாட்டுக்கான கட்டணத்தை ரூ.2,500 ஆக உயர்த்தவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து பக்தர்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஜூலை 7-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் கருத்துகளை பெற்ற பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[youtube-feed feed=1]