சென்னை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1.97 கோடி பணத்தை மீட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் கூறுகையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (29), தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி வசூலிக்கப்பட்ட ரூ.2 கோடியை அலுவலகத்தில் இருந்த மர அலமாரியில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்தபோது பணம் மாயமானது தெரியவந்ததைத் தொடர்ந்து சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஹெல்மெட் அணிந்த ஒருவர் கட்டிடத்தின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து அலுவலகத்திற்குள் சென்று, அலமாரியை திறந்து பணத்தை திருடிச் சென்றது கண்டுபிடித்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (33), வேலு (36), சந்திரசேகரன் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், நிதி நிறுவனத்தில் அதிகளவு பணம் இருப்பதை அறிந்த அவர்கள் திட்டமிட்டு திருடியதாக தெரியவந்தது. ஜூன் 12-ம் தேதி இரவு காரில் வந்த மூவரில், கார்த்திகேயன் ஹெல்மெட் அணிந்து உள்ளே சென்று சாவியை எடுத்து பணத்தை திருடியதும், மற்ற இருவர் வெளியே காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1,97,94,000 பணம் மீட்கப்பட்டது. திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை அவர்கள் ஏற்கனவே செலவழித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்
[youtube-feed feed=1]