நடிகை சுகன்யா குறித்து வீரப்பன் தெரிவித்த அவதூறான குற்றச்சாட்டுகளை நீக்காமல் ஒளிபரப்பிய வழக்கில், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு, பத்திரிகையாளர் நக்கீரன் ஆர். கோபால் நடத்திய வீரப்பன் நேர்காணலை சன் டிவி ஒளிபரப்பியது. அந்த நேர்காணலில் நடிகை சுகன்யா குறித்து சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, சுகன்யா ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சன் டிவி, நக்கீரன் கோபால் மற்றும் வீரப்பன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நகர சிவில் நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, சன் டிவி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை நீதிபதி கே. குமரேஷ் பாபு விசாரித்தார். நேர்காணலில் இடம்பெற்ற தகவல்களை ஒளிபரப்புவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சன் டிவிக்கு இருந்ததாகவும், தேவையெனில் அவற்றை நீக்கவோ திருத்தவோ அந்த நிறுவனத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

எனினும், அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சர்ச்சைக்குரிய தகவல்களை ஒளிபரப்பியதால், சன் டிவி மீது தீங்கிழைக்கும் நோக்கம் (Malice) இருந்தது நிரூபணமாகிறது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், சுகன்யா அனுப்பிய சட்ட நோட்டீஸுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பான தொலைக்காட்சி சேனலில் அல்லாமல் ஒரு தமிழ் இதழில் மட்டும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, நகர சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிடத் தேவையில்லை எனக் கூறி, சன் டிவியின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

[youtube-feed feed=1]