இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது; அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, சமீர் அகமது என பெயர் மாற்றிக் கொண்டார். பின்னர், தமக்கு பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். அதை தாசில்தார் நிராகரித்ததை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி அமர்வு, “ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியவுடன் அவர் முஸ்லிம் மட்டுமே. மதம் மாறுவதற்கு முன் அவர் சார்ந்திருந்த ஜாதியின் அடிப்படையில், இஸ்லாமிய சமூகத்தில் அவரது நிலையை நிர்ணயிக்க முடியாது” என்று தெரிவித்தது.
மேலும், “மதமாற்றம் செய்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஏழு உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர் எனக் கருதி சான்று வழங்க முடியாது. மதமாற்றத்தின் மூலம் பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் அந்தஸ்தைப் பெற முடியாது” என்றும் நீதிபதிகள் கூறினர்.
இது தொடர்பாக தமிழக அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை, உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு முரணானது என்றும், நீதிமன்றத் தீர்ப்பை நிர்வாக உத்தரவால் மாற்ற முடியாது என்றும் அமர்வு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, மனுதாரருக்கு பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்க மறுத்த அதிகாரிகளின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.
[youtube-feed feed=1]