அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர் மீதான தொடர் கொலை முயற்சிகள், டிரம்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின் போது ஹோட்டலுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மெலானியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
2024ம் ஆண்டு ஜூலை மாதம் பெனிசில்வேனியாவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மிக மோசமான தாக்குதல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான டிரம்பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்த தகவல்கள் அப்போது பிபிசி-யில் செய்தியாக வெளியானது, அதில் :
பதவியில் இருக்கும் அதிபர் மற்றும் துணை அதிபருக்கு சேர்த்து சுமார் 300 பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறப்பட்டது.
பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றபோதும், நிபுணர்கள் கணிப்புப்படி, முன்னாள் அதிபருக்கு ஒரே நேரத்தில் சுமார் 80 அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க, மொத்தத்தில் 90 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவதாகக் கூறினர்.
பாதுகாப்பு என்பது அருகில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமல்லாமல் துல்லியத் துப்பாக்கி குழு, தாக்குதல் தடுப்பு குழு, கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல அடுக்குகளைக் கொண்டது. சாதாரணமாக முன்னாள் அதிபர்களுக்கு இந்த அனைத்து பாதுகாப்பும் தினசரி வழங்கப்படாது. ஆனால் விதிவிலக்காக டிரம்ப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் 2024 பட்ஜெட் சுமார் 3.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 30000 கோடி). இதில் 1 பில்லியன் டாலருக்கு மேல் பாதுகாப்பு பணிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8,000 ஊழியர்களில் 3,671 பேர் நேரடியாக பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும், டிரம்ப் தனது சொந்த மாநிலமான மர்-அ-லகோ செல்லும் போது தினசரி சுமார் 60,000 டாலர் செலவாவதாகவும், நியூயார்க் நகரில் பாதுகாப்பு பணிகளுக்காக தினசரி 1,00,000 டாலர் வரை செலவானதாகவும் டிரம்ப் அங்கு தங்கியிருந்தால் தினசரி செலவு 3,00,000 டாலர் வரை அதிகரித்ததாகவும் 2024ம் ஆண்டு வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், டிரம்ப் போன்ற அதிபர்களுக்கான பாதுகாப்பு மிகப்பெரிய செலவினத்துடன் பல அடுக்குகளைக் கொண்ட அமைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]