சென்னை: சென்னையில் 6 இடங்களில் கைவரிசை காட்டியதாக ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட அமீர்  வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சென்னையின் எஸ்.பி.ஐ வங்கியின் பல்வேறு ஏடிஎம் மையங்களில், பணம் டெபாசிட் இயந்திரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையின் கொள்ளையர்கள், பணம் எடுக்கும் இயந்திரத்தில் உள்ள  சென்சாரை விரல்களால் தடுத்து, நூதனமுறையில் லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரிய் வந்தது.

இந்த கொள்ளை சம்பவம்  தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷனர் (தெற்கு) கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், இதுபோன்ற கொள்ளை ஏற்கனவே டெல்லியில் நடைபெற்றிருந்தது தெரிய வந்தது. அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அரியான மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பதால், சென்னையில் நடைபெற்ற ஏடிஎம் மையங்களில்  கொள்ளை யடித்ததும், அவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டு ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, அரியானாவில் தலைமறைவாக இருந்த அமீர் என்பவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அமீர் குரூப்  சென்னையில் 6 இடங்களில் உள்ள ஏடிஎம்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அதன்படி,  ராமாபுரம், சின்மயா நகர், பாண்டி பஜார், வடபழனி, வேளச்சேரி, தரமணி ஆகிய 6 இடங்களில் உள்ள ஏ.டி.எம்-கலீல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.