சென்னை:  அதிகரித்து வரும் மக்கள் தொகை, அழிக்கப்படும் நீர் நிலைகள் போன்ற காரணமாக,  தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிவை சந்தித்தள்ளது. இது தொடர்பான ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட சுமார் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழைக்காலத்தின்போது, வழக்கத்தை விட அதிக அளவில் கொட்டியது. இருந்தாலும், மழைநீரை சேமித்து வைக்க  அரசு, போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்தது. அதே வேளையில், கோடையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,.  கோடை மழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. இதற்கிடையில்  மாநிலத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை அழித்து அரசு கட்டிங்களை கட்டி வருவதுடன்,  சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், படகுசவாரி, அது இதுவென்று, நீர் நிலைகளை பாழாக்கி வருகிறது. மேலும் தனியார் நிலங்களில் அதிகரித்து வரும் அடுக்குமாடி கட்டிங்கள் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால், நிலத்தடி நீர் கடுமையாக சரிந்து வருகிறது. இதற்கிடையில் கடுமையானவெயில் காரணமாக,  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில்  நடத்தப்பட்ட ஆய்வறிக்கை  வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய தமிழ்நாட்டின் தருமபுரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தருமபுரியில் நிலத்தடி நீர் கிடைக்கும் சராசரி ஆழம் கடந்த ஆண்டு ஏப்ரலில் 5.78 மீட்டர் என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 8.98 மீட்டர் அளவுக்கு கீழே சென்றுள்ளது.

அதேபோல், நாமக்கலில் 6.15 மீட்டரிலிருந்து 9.34 மீட்டராகவும், கோவையில் 9.4 மீட்டரிலிருந்து 10.85 மீட்டராகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1 முதல் 2 மீட்டர் வரை சரிந்துள்ளன.

சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் 0.5 மீட்டர் குறைந்துள்ளது. அதேசமயம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.