சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது.  சென்னையில் ரூ.100ஐ நெருங்கி உள்ளது. தொடர் விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக, பொதுப்போக்குவரத்து இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையே தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்வாதாரத்தை காக்க, இருசக்கர வாகனம் மூலமே பணிக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது.  இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் விலைவாசிகளும் அதிகரித்து வருகின்றன. இது மக்களிடையே அதிருப்தியையும், வேதனையும் தெரிவித்து வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச கச்சாவிலையின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணை நிறுவனங்களுக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியது. அன்றுமுதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மாநில சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களை ஏமாற்றும் வகையில் சில காலம் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதும், தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

தமிழகத்திலும் கடந்த ஏப்ரல் 6ந்தேதி  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.  சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.88 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.89 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அது மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99.19 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.93.23 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. காட்டுமன்னார் கோவிலில் ரூ.101.36க்கும், ஆத்தூரில் ரூ.100.08க்கும், தருமபுரியில் ரூ.100.17க்கும், கள்ளக்குறிச்சியில் ரூ.100.34க்கும், கிருஷ்ணகிரியில் ரூ.100.51க்கும், நீலகிரியில் ரூ.100.66க்கும், ராமநாதபுரத்தில் ரூ.100.22க்கும், திருப்பத்தூரில் ரூ.100.56க்கும், திருவண்ணாமலையில் ரூ.100-27க்கும், மயிலாடுதுறையில் ரூ.100.14க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.11-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.88.65-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.22 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.16 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ.97.97 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கின்றனர். மக்களின் வாழ்வதாரம் குறித்து கவலைப்படுவதில்லை.