மேட்டூர்: டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் 12ந்தேதி குறுவை சாகுபாடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இது  விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடியில் 647 பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

120 அடிகொண்ட மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டு நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,455 கன அடியாக குறைந்தது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் தொடர்ந்து மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டு உள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம்  88.98 அடியிலிருந்து 88.61 அடியாக சரிந்தது.  நேற்று (வெள்ளிக்கிழமை)  காலை வினாடிக்கு 8,035 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை 5455 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 51.07டிஎம்சி -ஆக உள்ளது.