டில்லி

ந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்தியப் படையே தவறுதலாகச் சுட்டு வீழ்த்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள், பாகிஸ்தான் எல்லையில் இருந்த பாலகோட் தீவிரவாத முகாமில் குண்டு வீசித்  தாக்குதல் நடத்தியது.  அதனால் அடுத்த நாள், ஜம்மூ காஷ்மீரின் புட்காம் பகுதியில் பறந்து கொண்டிருந்த, Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை இந்திய விமானப்படை, தவறுதலாகச் சுட்டு வீழ்த்தி உள்ளது.

அப்போதைய பதற்றமான சூழலில் ஹெலிகாப்டர் வந்ததைத் தொடர்ந்து, அதை ஏவுகணை என்று தவறுதலாகப் புரிந்து கொண்ட விமானப் படை அதிகாரிகள், அதை நோக்கி ஏவுகணையைச் செலுத்தி உள்ளனர்.ஏவுகணை ஹெலிகாப்ட்டரைத் தாக்கியதால், வானில் தீப்பிடித்த ஹெலிகாப்ட்டர் கீழே விழுந்தது.

இது குறித்த தகவலை அளித்த இந்திய விமானப் படையின் தளபதி ராகேஷ் குமார், “அப்போது செய்தது மிகப் பெரிய தவறு” என்று ஒப்புக் கொண்டுள்ளார். இந்த  தாக்குதலால் 6 விமானப் படை வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

ராகேஷ் குமார் “இவ்வாறு நடந்தது மிகப் பெரிய தவறு என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இது குறித்தான விசாரணை சென்ற வாரம் முடிவடைந்தது.  ஹெலிகாப்டரை நாங்கள் செலுத்திய ஏவுகணைதான் சுட்டு வீழ்த்தியது.  இதைத் தொடர்ந்து, துறை ரீதியிலான மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   இந்த சம்பவம் தொடர்பாக  2 அதிகாரிகளிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறி உள்ளார்.