மும்பை

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை ஐந்தாம் முறையாக 5.15% அளவுக்கு குறைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இரு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு அந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மற்றும் நிதிக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.   அதன்படி மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான (ரெபோ) வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.     அதன்படி தற்போது ரெபோ வட்டி விகிதம் 5.15% ஆகி உள்ளது.  இந்த வட்டி விகிதம் 5 ஆம் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வங்கிகள் அளிக்கும் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.   மொத்தத்தில் ரெபோ வட்டி விகிதம் இதுவரை 1.35% அளவுக்குக் குறைந்துள்ளது.