டில்லி

கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியாது என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள்.   செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல்நாத் பதில் அளித்துள்ளார்.

கமல்நாத்,”மோடி அரசு சமீபத்தில் கார்ப்பரேட் வரி விகிதத்தைக் குறைக்கும் போது முதலீட்டாளர்களை ஈர்க்க அவ்வாறு குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.    ஆனால் முதலீடு செய்யும் மக்கள் இத்தகைய நடவடிக்கைகளால் ஈர்க்கப்படுவது இல்லை.     ஆகையால் வரிக்குறைப்பால் முதலீடுகள் அதிகரிக்காது.

நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத்தில் முன்னேற்றம் தென்பட்டால் மட்டுமே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன் வருவார்கள்.  தற்போது தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து வேலையின்மை அதிகரித்துள்ளது.   இது முதலீட்டாளர்களை நிச்சயமாக ஈர்க்காது.

சில மாதங்களுக்கு முன்பு வரி விகிதங்களை உயர்த்தி விட்டு மீண்டும் குறைப்பதால் முதலீட்டாளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?   அது மேலும் பயத்தை அதிகரிக்கும்.  உங்களால் முதலீட்டை மிரட்டிப் பறிக்க முடியாது.   அவர்களாக விரும்பி முதலீடு அளிக்க வேண்டும்.

ஜி எஸ் டி என்பது ஒரு நல்ல நடவடிக்கையாகும்.  ஆனால் அதில் இவ்வளவு திருத்தம் இதுவரை யாரும் காணாத ஒன்றாகும்.   இது மக்களிடையே ஒரு நிலையற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.   சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை வருடங்களுக்குள் இத்தனை திருத்தங்கள் ஏற்படும் போது அந்த முறை மிகவும் குழப்பமானதாகவே மக்களுக்குத் தெரியும்” எனக் கூறி உள்ளார்.