டில்லி

காஷ்மீர் புதிய ஆளுநர் மனோஜ் சின்கா குறித்து விக்கிபீடியாவில் சுய விவரத்தில் தகவல்கள் தவறாக மாற்றப்பட்டுள்ளன.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   அத்துடன் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் முடக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் பகுதியின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மனோஜ் சின்கா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  ராஜினாமா கடிதம் அளித்து 24 மணி நேர அவகாசத்துக்குள் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

 

இந்நிலையில் விக்கிபீடியாவில் மனோஜ் சின்கா சுயவிவரத்தில் “மனோஜ் சின்கா காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இணையம் கொண்டு வர உள்ளார்.  அவர் இந்தியாவில் சட்ட விரோதமாக பரவி உள்ள காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் ரகசிய ஆதரவாளர் ஆவார். அவர் இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை” என மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் விக்கிப்பீடியாவில் சுய விவரங்களை விஷமிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பது தெரிய வந்துள்ளது.