2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சத்யபால் மாலிக் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மத்திய பாஜக அரசின் மெத்தனமே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

சம்பவம் நடைபெற்ற போது அம்மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்-கின் இந்த குற்றச்சாட்டு நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக நடந்த உண்மையை அறியவிரும்புவதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து டெலிகிராப் இந்தியா நாளிதழ் நடத்திய பேட்டியின் போது இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 2019, ஜம்முவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டதை அடுத்து ஆங்காங்கே சிக்கிக்கொண்ட CRPF வீரர்கள் 2500 பேரை மீட்க 5 விமானங்கள் வேண்டும் என்று CRPF தலைமையகம் மூலம் மாநில சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை அனுப்பினர்.

சி.ஆர்.பி.எப். அதிகாரிகளின் இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாததை அடுத்து வாகனங்கள் மூலம் பாதுகாப்பு இல்லாத சாலைகள் வழியே வந்த வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சக அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததாக சத்யபால் மாலிக் பிரதமர் மோடியிடம் கூறியதாகவும் அதற்கு பிரதமர் தன்னை வாயை மூடச் சொன்னதாவாகும் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேற்கு வங்க மாநிலம் தெஹட்டாவைச் சேர்ந்த சுதிப் பிஸ்வாஸ் (நாடியா) மற்றும் பௌரியா (ஹவுரா) பப்லு சாந்த்ரா ஆகிய சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு இந்த விஷயத்தில் இனியும் மௌனம் காக்காமல் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இறந்துபோன சுதீப் (28) தந்தை சன்யாசி பிஸ்வாஸ் மற்றும் பப்லு (40) மனைவி மிதா, 36 ஆகியோர் பேசுகையில், இறந்து போன வீரர்களுக்காக மத்திய மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகள் வழங்கிய இழப்பீடு தொகை தங்கள் வாழ்க்கையை நடத்த போதுமானதாக உள்ளது இருந்தபோதும் நான்கு ஆண்டுகளாகியும் தாக்குதல் தொடர்பான உண்மை என்ன என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை அடுத்து அதனை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளதாக டெலிகிராப் இந்தியா-வுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..