“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

‘தி வயர்’ இதழுக்காக கரண் தாப்பர் நடத்திய சந்திப்பின் போது சத்யபால் மாலிக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெஹபூபா முப்தி-க்கு பெரும்பான்மை இருந்தபோதும் அவரை ஆட்சிப்பொறுப்பேற்க அனுமதி மறுத்தார்.

தவிர, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை உறுதி செய்யும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோதும் புல்வாமா தாக்குதலின் போதும் ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னராக பதவி வகித்தார்.

இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி வரும் மாலிக், கரண் தாப்பருடனான பேட்டியில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் காட்டமாக பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட RDX வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு 10 – 15 நாட்கள் காஷ்மீருக்குள் சுற்றித்திருந்திருந்தது குறித்து நமது உளவுத்துறைக்கு தெரியாமல் இருந்தது மிகப்பெரிய தோல்வி என்று குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து கார்பெட் பார்க் வெளியே இருந்து என்னை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி “இது குறித்து வாயை திறக்கக் கூடாது” என்று தனக்கு உத்தரவு போட்டதாகக் கூறியுள்ளார். மோடி தவிர தன்னுடன் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னிடம் இதேயே வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் முக்கிய புள்ளிகளில் ஒருவரான ராம் மாதவ் தன்னிடம் அனல் மின் நிலையம் அமைப்பதற்கும் மற்றும் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் தொடர்பாகவும் சாதகமான உத்தரவை வழங்க 300 கோடி ரூபாய் பேரம் பேசியதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு தான் தெரிவித்த நிலையில் அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, “பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை” என்று கூறிய மாலிக் இதைக் கூறுவதால் எனக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்வேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

தவிர, 2022 அக்டோபர் மாதம் மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின் முக்கிய பொறுப்பு ஒன்று தருவதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல தயாரான நிலையில் பிரதமர் அலுவலக தலையீட்டால் அந்த வாய்ப்பு நழுவியதோடு பாதியிலேயே நான் திரும்பி வந்தேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஆளுநர்கள் நியமன விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தகுதியில்லாத “மூன்றாம் தர மக்களை” ஆளுநர்களாக நியமித்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுத்தது வரலாறு காணாத தவறு என்று கூறிய மாலிக். அதானி ஊழல் குறித்து ராகுல் காந்தி சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார், இதற்கு பிரதமரால் தெளிவாக பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.