முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் ஹாசன் தொகுதியில் மீண்டும் எம்.பி.யாக போட்டியிடும் பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜ்வல் ரேவண்ணாவால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் சிக்கியுள்ளதாகவும் இதில் 300க்கும் அதிகமான பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னதாக வெளியான இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

மேலும், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரஜ்வல் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகவும் அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.பி. வேட்பாளர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி அம்மாநிலத்தில் மகளிர் அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.