கோவை: முன்னாள் அதிமுக அமைச்ச ர்எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று 3வது முறையாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மற்றும் வாக்குவாதம் செய்த 7 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்பட நூற்றுக்கணக்கான தொண்டர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கோவை வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது தெருவிளக்கு மாற்றம் செய்ததில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். இன்று ரெய்டு நடப்பது குறித்து தகவல் அறிந்ததும், கோவையில் உள்ள வேலுமணி ஆதரவாளர்கள், அவரது வீடு முன்பு குவிந்தனர். ஏராளமானோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், அதிமுக எம்எல்ஏக்களும் ஒவ்வொருவருவதாக அங்கு வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து அவர்களை கலைத்து செல்ல காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆனால், யாரும் கலைந்து செல்ல மறுத்து , போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்க வேனில் ஏற்றி கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி,விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.   கைது செய்யும் போது போலீஸாருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நிலவியது .