சென்னை:  உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி பெரியவர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை காரணமாக மலை வாசஸ்தலங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர். அதன்படி, கொடைக்கானல், ஊட்டி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுக்கும் மக்கள் குடும்பத்தோடு படையெடுத்து வருகின்றனர்.  ஊட்டியில் இந்த வருடம்  வெயிலுடன் ஈரப்பதும் காணப்பட்டாலும்,  ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்,  ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் , அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோவை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குறைந்த டிக்கெட்டில் சுற்று பேருந்து இயக்கப்படு வதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் கண்டு களிக்க சுற்று பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், கோவை புதிய பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோடை கால முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், குறைந்த கட்டணத்திலும் கண்டுகளிக்க சுற்றுப்பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெரியர்வர்களுக்கு ரூ.100 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சுற்றுப்பேருந்தானது,  மத்திய பேருந்து நிலையம்,  தண்டர் வேர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்க, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டி மியூசியம், ரோஜா பூங்கா வரை செல்லும்.

இந்த பகுதிகளுக்கு சுற்றுப்பேருந்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள், அன்று முழுவதும்     தாங்கள் விரும்பிய நேரம் வரை சுற்றுலா தலங்களில்  நேரத்தை செலவழித்துவிட்டு,  எற்கனவே வாங்கிய டிக்கெட் மூலம் அடுத்தடுத்து வரும் சுற்று பேருந்தில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்று முதல் 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதால் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளதாலும் , நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அருகில் உள்ள மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 68 போலீசார் நேற்று ஊட்டி புறப்பட்டு சென்றனர். இதில், 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 17 எஸ்ஐக்கள் மற்றும் 49 போலீசார் என மொத்தம் 68 பேர் ஊட்டி சென்றுள்ளனர். அவர்கள் அங்கு ஒரு வாரம் பணியாற்றி திரும்பிய பின், மற்றொரு அணியாக 68 பேர் மீண்டும் ஊட்டி அனுப்பி வைக்கப்படுவர் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.