சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணாசாலையில் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்துபோய் உள்ளது. போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட  உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக  அண்ணாசாலை- வாலாஜா சாலையில் நடக்கும் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளது அதுபோல அண்ணாசாலையின் ஆங்காங்கே திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து தற்போது வாலாஜா சாலையில் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது.

பேரணி அண்ணா சாலையில் இருந்து கடற்கரை சாலை நோக்கி செல்கிறது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திமுக உள்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் பங்கு பெற்று வருகின்றனர்.

போலீசாரின் தடுப்பை மீறி பேரணி நடைபெற்று வருகிறது. பிரமாண்டமான பேரணி திருவல்லிக்கேணி வழியாக சென்னை கடற்கரைக்கு சென்று அங்கு மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.