டெல்லி: விமான பயணக்கட்டணத்தை இஎம்ஐ-ல் (மாதத் தவணை முறை) செலுத்தலாம் என பிரபல விமான நிறுவனமான  ஸ்பைஸ்ஜெட் அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டம் 08-11-2021 (நேற்று) முதல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, விமான பயணிகள், தங்களது விமான பயணத்துக்காக கட்டணத்தை  தவணை முறையில் (இஎம்ஐ) செலுத்தலாம்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விமான பயணிகளின் வசதிகளுக்கேற்ப, விமான பயணத்திற் கான டிக்கெட் கட்டணத்தை இஎம்ஐ முறையில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி,  விமான பயணிகள் பயண கட்டணத்தை 3, 6, 9 மற்றும் 12 மாதத் தவணைகளாக செலுத்தலாம். இதில் 3 மாதத் தவணையில் செலுத்துவோருக்கு வட்டியும் கிடையாது.

‘மாதத் தவணையில் விமானக் கட்டணத்தை செலுத்த விரும்பும் வாடிக்கையாளா்கள் தங்களுடைய பான் காா்டு எண், ஆதாா் எண் அல்லது உரிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும், வாடிக்கையாளா்கள் தெரிவிக்கும் தகவல்கள் சரியானதுதான் என்பதை மொபைல்  கடவுச் சொல் அனுப்பி சரிபாா்க்கப்படும்.

விமான கட்டணத்தை தங்களுடைய யுபிஐ ஐடி மூலம் முதல் தவணையை செலுத்தி விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு அதே யுபிஐ ஐடி மூலம் பிற தவணைகள் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும்.  இந்த மாதத் தவணை திட்டத்தை பயன்படுத்த வாடிக்கையாளா்கள் கிரெடிட், டெபிட் காா்டுகளை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.