பள்ளி கூடம் – கவிஞர் ராஜ்குமார் மாதவன்

கருப்பு மனிதன்
கர்ம வீரன்
காமராசு கண்ட கனா
மைல் கல்லுக்கு ஒரு பள்ளி !
ஒரு நாடே பள்ளிக்கூடமானது !

100 கோடி தொடாத நிதிநிலை
இது சாத்தியமா என்றவர் மத்தியில்
மனம் இருந்தால் மார்கம் உண்டு !
சாட்சி நானானேன்!

தரிசு நிலம்
ஊர் தந்த
கல், மண்
ஊழியம் போட்டு
ஊர் உழைத்து
பள்ளி என்று பெயரிட்டு
உதயமானேன் அன்று !

ஆடு மாடு மேய்த்தவனை
காடு கரையில் திரிந்தவனை
கடை கன்னியில் உழைத்தவனை
செங்க சூளையில் அலைந்தவனை
தேடி பிடித்து அடைத்து அவனை
ஆத்திச்சூடி அறியச்செய்தோம் !

பிறந்த தேதி தெரியாதவனை
தலைசுற்றி காதை தொட்டு,
தொட்டவனுக்கு பிறந்ததேதி தானிட்டு
பதிவேட்டில் சேர்ந்தவர் பலர்!

வயிற்று பசியால் என்பக்கம்
ஒதுங்காதவனையும் அழைத்துவர
மதிய உணவு திட்டம் !
படிக்க, ஊழியமாய் உணவு
தந்த சமையலறை நான்.
பயின்றவன் மத்தியில்
வேற்றுமை போக்க
சீருடை கண்டேன்
சமத்துவம் சமைத்தேன்.

என்னில் பயின்றவன்
விண்கலம் கண்டான்
நிர்வாகி ஆனான்
தொழிலை வளர்த்தான்
மருத்துவம் செய்தான்
விமானம் ஏறினான்
கண்டம் தாண்டினான்- ஆனால்
ஏனோ என்னை மறந்தே போனான் !
அந்தோ ! என்ன விந்தை ?
என்னை விதைத்தவனையும்
அன்றோ மறந்தான் !

கூரை சரிந்து
சுவர்கள் இடிந்து
பலகை சிதைந்து
குட்டி சுவர் பள்ளியானேன் !
காமராசும் நானும்
உன்மீது வைத்த நம்பிக்கையை
என்னிடம் பயின்ற நேற்றய மாணவன்
என்மீது இன்று வைப்பதில்லை, ஏன் ?
தாய் மறந்த சேயும்
எனை மறந்த நீயும்
நற்கதி அடைவாயோ ?