பாட்னா

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் அக்கட்சியினர் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 15 வருடங்களாகவே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு பின்னடைவு அதிகரித்து வ்ருகிறது. பீகார் மாநிலத்தில் 2004 ஆம் வருட மக்களவை தேர்தலில் அக்கட்சி 30.7% வாக்குகள் பெற்றது. இது 1990 ஆம் வருடம் அக்கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதல் முறை முதல்வரான போது கிடைத்த வாக்குகளை விடவே 5% அதிகமாகும். அதன் பிறகு 2005 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலில் அது 23.45% ஆக குறைந்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக குறைந்து தற்போதைய மக்களவை தேர்தலில் 15.4% ஆகி உள்ளது.

இந்த கட்சியின் வாக்கு வங்கி என்பது யாதவ் இனத்தின் வாக்குகள் ஆகும். ஆனால் இம்முறை மொத்த யாதவ வாக்குகளில் 55% மட்டுமே இக்கட்சிக்கு கிடைத்துள்ளன.  இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது.

இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு தேஜஸ்வி யாதவ் எங்கு சென்றுள்ளார் என்பது தெரியாத நிலை உள்ளது. தற்போது இக்கட்சி லாலுவின் மக்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் மற்றும் மிசா பாரதி ஆகியோர் பொறுப்பில் உள்ளது.

தேஜஸ்வி யாதவ் லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண சென்றிருக்கலாம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் தெரிவிக்கிறார். ஆனால் தேர்தல் முடிவால் மனம் தளர்ந்த தேஜஸ்வி தனது சகோதரர்களின் ஆலோசனைப்படி வெளியில் வராமல் உள்ளார் என வேறு சிலர் தெரிவிக்கின்றனர். தேஜஸ்வி டில்லிக்கு சென்று பாஜகவுடன் கட்சியை இணைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

முசாபர்பூர் குழந்தைகள் மரணம் குறித்து அவர் கண்டுக் கொள்ளாததால் அந்த நகரில் தேஜஸ்வியை காணவில்லை எனவும் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5100 பரிசு அளிக்கபடும் எனவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆயினும் அவர் வெளிவரவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் மனோஜ் ஜா அவர் டில்லியில் இருப்பதாகவும் நிலைமையை கண்காணித்து வருவதாகவு தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வி தனது தந்தை லாலுவின் பிறந்த நாள் அன்று கூட அவரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் அக்கட்சியினர் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரு சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு கட்சி மாற திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக தூது விடுவதாகவும் செய்திகள் வருகின்றன.

விரைவில் தேஜஸ்வி யாதவ் வெளி வந்து கட்சியில் கவனம் செலுத்தாவிடில் யாதவ் சாம்யாஜ்யம் முடிவுக்கு வரும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.