டில்லி

போலி கொள்முதல் கணக்கு காட்டி லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் விரைவில் சோதனை நடத்த உள்ளனர்.

ஜிஎஸ்டி விதிப்படி நிறுவனங்கள் கொள்முதல் செய்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி திரும்ப அளிக்கப்படுகிறது. அதை பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் போலி கொள்முதல் கணக்கை காட்டி அந்த ஜிஎஸ்டி தொகையை திரும்ப பெறுகின்றன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் கணக்கில் வராதபடி ஏராளமான லாபம் ஈட்டி வருகின்றன.

இந்த மாதம் 21 ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது இவ்வாறு வரி ஏய்ப்பு செய்து லாபம் ஈட்டுவோருக்கு லாபப் பணத்துடன் கூடுதலாக 10% அபராதம் விதிக்கப்பட முடிவு செய்யபட்டுள்ளது. தற்போது அந்த வரி ஏய்ப்பு லாபப்பணத்துடன் கூடுதலாக ரூ.25000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதை கண்டறிய ஜிஎஸ்டி அதிகாரிகள் விரைவில் போலிக் கொள்முதல் குறித்து நிறுவனங்களில் சோதனை இட உள்ளனர்.

இது குறித்து நிறுவனங்களின் சார்பில், “ஜிஎஸ்டி வரி அதிகாரிகள் இது போல போலி லாபம் குறித்து கவனமுடன் இருப்பது வரவேற்க தக்கதாகும். ஆனா அதே நேரத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணக்கிலும் சந்தேகம் கொண்டு சோதனை செய்வது சரியான முறை அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.