டில்லி:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சம்புலால் ரீகர் (வயது 36). 2 மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலத் தொழிலாளி முகமது அப்ரசூல் (வயத 50) என்பவரை ரீகர் கொலை செய்து உடலை எரித்தார். இந்த கொடூர காட்சியை வீடியோவில் பதிவு செய்தார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார் ரீகரை கைது செய்து ஜோத்பூர் மத்திய சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக அப்ரசூலை கொலை செய்துவிட்டு அதை மறைக்க லவ் ஜிகாத் காரணமாக கொலை செய்ததாக கூறி திசை திருப்பினார்.

இந்நிலையில் திகார் சிறைக்கு அடுத்து மிக பாதுகாப்பு சிறை வளாகமாக கருதப்படும் ஜோத்பூர் மத்திய சிறை அறையில் பதிவு செய்யப்பட்ட 2 வீடியோக்களை ரீகர் வெளியிட்டுள்ளார். அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இந்துக்களை ஒன்றிணைய அறிவுறுத்தியும், மோடிக்கு ஆதரவு அளிக்க கோரியும் பேசியுள்ளார். மேலும், சிறையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மிகுந்த சிறை வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள ஜாமர் கருவிகளை மீறி செல்போன் வீடியோவில் தனது பேச்சை பதிவு செய்து ரீகர் வெளியிட்டது எப்படி என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. அதோடு போதுமான கல்வி அறிவு இல்லாத ரீகர் இஸ்ரேல் கொள்கைகள், இந்திய பாதுகாப்பு அம்சங்களை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கப்பட்டுள்ள வாசுதேவன் என்பவருடன் ரீகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் குறித்தும் வீடியோ பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரீகர் மனதளவில் பாதித்திருப்பதாகக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னை வேறு சிறை அறைக்கு மாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார். காரணம் கேட்டால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றார். ஆனால், விசாரணையில் இது போன்ற ஒரு தகவல் இல்லை. ரீகர் செல்போன் வீடியோவில் பேசிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறை வளாகத்தின் அருகில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் 7 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறை வளாகத்திற்குள் இன்டர்நெட் சேவை கிடைக்க ஏதுவாக அமைந்துள்ளது. ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அசோக் ரத்தோர் கடந்த ஜூலையில் நீதிமன்றத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் ஜோத்பூர் சிறையில் சரளமாக இன்டர்நெட் சேவை கிடைக்கிறது. அது குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு பல குற்றச் செயல்களுக்கு திட்டமிடப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.