டில்லி

பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்காக உள்ளூர் விவகாரம் குறித்து அறிக்கை அனுப்ப பிரதமர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் தேர்தல் நன்னடைத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இதில் ஒரு விதியாக, “அமைச்சர்கள் தங்களுடைய அலுவலக பயணத்தின் போது தேர்தல் பணிகளை செய்யயக் கூடாது. இரண்டையும் ஒன்றிணைப்பது விதி மீறல் ஆகும். அத்துடன் அரசு இயந்திரம் மற்றும் அரசுப் பணியாளர்கள் யாரையும் எவ்வித தேர்தல் பணிகளுக்கும் பயன்படுத்துவது விதி மீறல் ஆகும்” என உள்ளது.

கடந்த 8 ஆம் தேதி அன்று நிதி அயோக் மூலமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து  யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஈ மெயில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதில், “யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியரும் தங்கள் உள்ளூரில் உள்ள சரித்திர சம்பவங்கள், உள்ளூர் சரித்திர நாயகர்கள், கலாசாரம், மதத் தகவல், மற்றும் உள்ள அனைத்து விவரங்களும் பிரதமர் அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். உங்கள் யூனியன் பிரதேசத்துக்கு பிரதமர் விரைவில் வர உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஈ மெயில் நிதி அயோக் அதிகாரி பிங்கி கபூர் என்பவர் மூலம்  டில்லி, சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களின் தலைமை செயலருக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இது குறித்து பிங்கி கபூர், “வழக்கமாக யூனியன் பிரதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு நாங்கள் விவரம் அனுப்புவோம். அதற்காக விவரங்களை கேட்டுள்ளோம். இது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் யூனியன் பிரதேசங்களில் மட்டுமின்றி பாஜக ஆளும் மகாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப் பட்ட சில நாட்களில் அந்த மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்து உரையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

THANX : THE SCROLL