டில்லி

பி எம் நரேந்திர மோடி என்னும் மோடியின் பயோபிக் திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “பி எம் நரேந்திர மோடி” இந்த படத்தில் மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். நாளை இந்த திரைப்படம் வெளியாவதாக இருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் உள்ள போது அதுவும் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மும்பை மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்தது.   இன்று தேர்தல் ஆணையம் தேர்தல்கள் முடியும் வரை ”பி எம் நரேந்திர மோடி” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு பல எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்சய் ஜா, “தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு நான் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தேர்தல் பிரசாரத்துக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது போல தேர்தல் விதிகளை மீறி ஆளும் கட்சி பிரசாரம் செய்வது அவமானத்துக்குரிய விவகாரமாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இந்த தடை நமோ டிவிக்கும் பொருந்தும் என கூறி உள்ளன. தற்போது முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் நமோ டிவி மூலம் பிரதமரின் பிரசார உரைகள் ஓளிபரப்புவதும் விதிகளை மீறிய செயலாகும் எனவும் தேர்தல் ஆணையம் விரைவில் நமோ டிவிக்கு தடை விதிக்கும் எனவும் பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.