சென்னை :

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில்  இன்று 2வது நாளாக  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட கமல், ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  நமது பயணம் கஜானாவை நோக்கி அல்ல…மக்களை நோக்கிய பயணம் என்று கூறினார்.

பிப்ரவரி 21ந்தேதி அரசியல் கட்சி குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தில்   அறிவிப்பு வெளியிட்டு,  அதைத்தொடர்ந்து,  மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள கமல் கடந்த 2 நாட்களாக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து வந்தார்.

நேற்று 4 மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய கமல் இன்று ஒரே நாளில் 27 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேசினார்.

அதைத்தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் பேசிய கமல், நமது பயணம் மக்களை நோக்கியே தொடங்கி உள்ளது.  நாம் நோக்கிச் செல்வது கஜானாவை நோக்கி அல்ல; மக்களை நோக்கிய பயணம் இது என்றார்.

மேலும்,   ரசிகர்கள் மத்தியில் சாதி, மத பேதம் கிடையாது எனவும், கோஷங்கள் கூட கண்ணியமாக இருக்க வேண்டும் எனவும் தமது பாதை மிகவும் நீளமானது எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு முன் ரசிகர்களை சந்திக்கும்போதும், யாரிடமும்  எந்த கட்சி என கேட்டது கிடையாது, ஆனால்  இனி கேட்பேன் எனவும் தெரிவித்தார்.

மக்கள் முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்வதால் வெற்றி நிச்சயம் எனவும்  மக்களை நோக்கிய இந்த பயணம் தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இவ்வாறு கமல் பேசினார்.