சென்னை: கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய பாஜக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டுக்கு தேவையா நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி, ஆனால் பாஜக அரசு ஒதுக்கியதோ வெறும் ரூ.275 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம் என காட்டமாக விமர்சித்து உள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.397 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பேரிடர் நிதியிலிருந்து முதல் கட்டமாக 160 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மத்திய பாஜக அரசுக்கும், தமிழ்நாடு திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை வழங்குவதில் மத்தியஅரசு பாரபட்சம் காட்டி வருகிறது.  இதற்கு திமுக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  பிரதமர் மோடி உள்பட மத்தியஅரசு மற்றும் அமைச்சர்கள் மீது கடுமையான விமர்சனங்களை  வீசி வருகின்றனர். உதயநிதி உள்பட பலர்  பிரதமர் மோடிமீது தரம்தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட புயல் வெள்ளம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிதியை மத்தியஅரசு இதுவரை வழங்காத நிலையில், இது தொடர்பாக மத்தியஅரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதுமட்டுமின்றி, மத்தியஅரசு மீது திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசும், வளட்சி நிதி கோரி மத்தியஅரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு மத்தியஅரசு சார்பில் முறையான பதில் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த நிலையில்,  கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது

தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு மட்டும் ரூபாய் 285 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் இருந்து ரூபாய் 115 கோடியை மட்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூபாய் 397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் இருந்து ரூபாய் 160 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஆனால், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசு ரூபாய் 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவுபெற்றுவிட்டது. கர்நாடகாவில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், கர்நாடகாவில் எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கு விரைவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் எஞ்சிய 14 தொகுதிகளில் உள்ள மக்களின் வாக்குகளை கவரவே, மத்திய அரசு கர்நாடகாவிற்கு மட்டும் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்திருப்ப தாகவும், தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதாகவும் தமிழக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை மதுரை கம்யூனிஸ்டு எம்.பி.யான சு.வெங்கடேசன்,  கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி மட்டுமே மத்தியஅரசு வழங்கியது. ஆனால், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, ‘பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம்’ என்றும்,

கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவித்து உள்ளது என்று விமர்சித்துள்ள வெங்கடேசன்,  தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்து வருகிறது என்றும்,  மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. ஆனால். தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்.கண்டனம் என தெரிவித்து உள்ளார்.

ர்நாடக மாநிலத்தில்,  முன்னெப்போதும் இல்லாத வகையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்டிஆர்எஃப்) கீழ் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதுகுறித்து பேசிய முதல்வர் சித்தராமையா,  மாநிலத்திற்கு வேறு வழியில்லை என்றும், NDRF இன் கீழ் உரிமை கோருவதற்கு அரசாங்கம் ஐந்து மாதங்கள் காத்திருந்ததாகவும், ஆனால், அதற்கு மத்தியில் இருந்து சாதகமான பதில் இல்லாத நிலையில், நீதிமன்றத்தை நாடி இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக,  வறட்சி காரணமாக,   நிதிகோரி கர்நாடக அரசு மத்தியஅரசுக்கு அறிக்கை அனுப்பியது. மத்திய அரசுக்கு மாநிலம் சமர்ப்பித்த குறிப்பாணையின்படி, 236 தாலுகாக்கள் அல்லது துணை மாவட்டங்களில் 223 வறட்சி பாதித்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 48 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2023 அக்டோபரில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்வதற்காக, அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழுவும் (IMCT) மாநிலத்திற்குச் சென்றது. கடந்த ஆண்டு பருவமழைக் காலத்தில், ஜூன் மாதத்தில் 56 சதவீத மழைப் பற்றாக்குறை (122 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சம்) மற்றும் 73 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் (122 ஆண்டுகளில் அதிகபட்சம்).

வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் ரூ.35,162.05 கோடியாக இருக்கும் என்று மாநில அரசு மதிப்பீடு செய்து, NDRF-ன் கீழ் ரூ.18,171 கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளது. இதில், பயிர் இழப்புக்கான உள்ளீட்டு மானியமாக ரூ.4,663.12 கோடி (விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்களின் விலையில் வழங்கப்படுகிறது) வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச நிவாரணமாக ரூ.12,577.9 கோடி, குடிநீர் தேவைக்காக ரூ.566.78 கோடி, கால்நடைகளுக்கு ரூ.363.68. பராமரிப்பு என கூறப்பட்டிருந்தது.

 “கடந்த ஆண்டு பருவமழையின் போது, ​​கர்நாடகா இயல்பை விட 18 சதவிகிதம் மழையைப் பெற்றது, இது 2015 க்குப் பிறகு மிகக் குறைவு. பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் கூட மாநிலத்திற்கு அதிக மழை பெய்யவில்லை.”  தென்னிந்தியாவின் நீர்நிலைகள் இயற்கையில் பாறைகள் மற்றும் ஒரு நேரத்தில் அதிக தண்ணீரை வைத்திருக்க முடியாது, அதாவது மழையின் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக உணரப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  மாநிலத்தில் உள்ள 33 லட்சம் விவசாயிகளுக்கு இடைக்கால இழப்பீடாக ஒரு நபருக்கு ரூ. 2,000 – 628 கோடியை ஜனவரி மாதம் கர்நாடக  மாநில அரசு வழங்கியது.

ஏற்கனவே  நிதி காரணங்களால், கர்நாடக முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் தலைநகரில் “டெல்லி சலோ” போராட்டத்தை நடத்தினர், வரி மற்றும் பிற ஒதுக்கீடுகளில் மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய நிலையில், வறட்சி நிவாரண நிதி காரணங்களாலும் மீண்டும் மோதல் போக்கு நடைபெற்றது.

இந்த நிலையில்தான், மத்திய பாஜக அரசு கர்நாடக மாநில அரசுக்கு வறட்சி நிவாரண நிதி ரூ.3,454 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.