டில்லி

ந்திய வெளியுறவுத் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க  சசிதரூர் தலைமையிலான குழு சிபாரிசு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை மேம்பாட்டுக்காக சசி தரூர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளது.   அந்தக் குழுவில் வெளியுறவுத் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.    அது மட்டுமின்றி  ஆலோசகர்களைப் பற்றியும் இந்தக் குழு ஆய்வு நடத்தி உள்ளது.   அதன் முடிவை தற்போது அரசுக்கு அறிக்கையாக அந்தக் குழு அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், “இந்தக் குழு வெளியுறவுத் துறையில் பணி ஆற்றும் அதிகாரிகளைக் குறித்து ஆய்வு நடத்தியது.  அதில் தேவையான அதிகாரிகள் நியமிக்கப் படவில்லை எனக் கண்டறியப் பட்டுள்ளது.   இந்தப் பணிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களை அமர்த்தலாம்.   அத்துடன் அவர்களை முழுநேரப் பணி மட்டுமின்றி ஆலோசகர்களாகவும் பணியில் அமர்த்தலாம். ” என குறிப்பிட்டுள்ளது

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், “தற்போது வெளியுறவுத் துறையில் பணியில் பணி அமர்த்துவதற்கான விதி முறைகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.    தனியார் துறையில் பணி புரிபவர்களையும் ஆலோசகர்களாக நியமிக்க அமைச்சகம் உத்தேசித்துள்ளது.   அது மட்டுமின்றி மற்ற அமைச்சகம்,  ராணுவம்,  மற்றுமுள்ள துறைகளில் உள்ளவர்களையும் இங்கு பணி மாற்றம் செய்து பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது”  எனத் தெரிவித்துள்ளது.