டில்லி,

பிரதமர் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையர் ஆச்சார்யலுவிடம் இருந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அந்த பொறுப்புகளை அவருக்கு பதிலாக மற்றொரு தகவல் ஆணையரான மஞ்சுளா பாராஷரால் கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ளது.

இதற்கான உத்தரவு நேற்று (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ளதாகவும், தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் இந்த உத்தவை பிறப்பித்துள்ளதாகவும்,

அதில், மோடியின் பட்டப்படிப்புச் சாறிதழைச் சரி பார்ப்பதற்கு டெல்லி பல்கலைக்கு உத்தரவிட்ட  ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடமிருந்து மனித வள மேம்பாட்டுத்துறை தகவல் அலுவலக பொறுப்புக்கள் பறிக்கப்படுவதாக வும், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொடர்பான அனைத்து புகார்களும், முறையீடுகளும் இனிமேல் மற்றொரு தகவல் ஆணையர் மஞ்சுளா பாராஷரால் மேற்கொள்வார் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோடி பட்டப்படிப்பு சர்ச்சை –  விவரம்?

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சவுகான். இவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்  பிரதமர் மோடி  முதன் முதலாக பாஸ்போர்ட்  பெறுவதற்காக அளித்த விவரங்கள், ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை  புதுப்பிக்க அவர் அளித்த விவரங்கள், ஆவணங்கள் ஆகியவை குறித்துக் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம், மத்திய தகவல் ஆணையத்திடம் விவரங்கள் கேட்டிருந்தார்.

‘இது குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் தகவல் அலுவலகம் கைவிரித்துவிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சவுகான் மீண்டும், சவுகான் மத்திய தகவல் ஆணையரிடம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேல் முறையீடு செய்தார். இவ்விண்ணப்பத்தை விசாரித்த மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே. மாத்தூர், முக்கிய நபர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடும் போது பெருமளவிலான மக்கள் நலன் சார்ந்த மனுக்களுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும் எனக் கூறி , மேல்முறையீட்டை ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில்,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேர்தல் விண்ணப்பப் படிவத்தில் தனது கல்வித் தகுதி குறித்து மோடி கொடுத்த தகவல்களை உறுதி செய்யும் பொருட்டு அதற்கான ஆவணச் சான்றுகளின் நகல்களை அளிக்கக் கோரி  நீரஜ் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போட்டிருந்தார்.

அவரது கேள்விக்கு,  மத்திய தகவல் ஆணையர்களில் ஒருவரான ஸ்ரீதர் ஆச்சார்யலு பதில் அளிக்க முற்பட்டார். அவரது கேள்விகளை டில்லி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி,  அதற்கான ஆவண நகல்களை வழங்கும் படி உத்தரவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், டில்லி பல்கலைக்கழகம் ஆவணங்களை தர மறுத்து மேல்முறையீடு செய்தது.

ஆனால்,டில்லி பல்கலைக்கழகத்தின்  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஆச்சார்யலு, கண்டிப்பாக ஆவணங்களைத் தரவேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக டில்லி பல்கலைக்கழகம், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டில்லி உயர்நீதி மன்றமும் வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்டு மத்திய தகவல் ஆணையரின் உத்தரவிற்குத் தடையுத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை தகவல் ஆணையர் ஆச்சார்யலு விடம் இருந்து மனிதவள மேம்பாட்டு துறை பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது.