CBSE தேர்வு முடிவுகளில் ஏற்படும் தவறுகளை சரிசெய்ய மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “CBSE மதிப்பெண்களில் தவறு ஏற்பட்டால் அதை சரிபார்க்கவும் மாணவர்களே பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. டிஜிட்டல் ஸ்கேன் நகலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.100, மொத்த மதிப்பெண் மறுகூட்டலுக்கு ரூ.100, ஒவ்வொரு கேள்விக்கும் மறு மதிப்பீட்டுக்கு ரூ.25 வசூலிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாணவர் தனது விடைத்தாளை முழுமையாக சரிபார்க்க ரூ.2,000 வரை செலவிட வேண்டியிருப்பதாகவும், சுமார் 4 லட்சம் மாணவர்கள் இத்தகைய விண்ணப்பங்களை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன்கள் மூலம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்படுவதால் மதிப்பீட்டில் தவறுகள் ஏற்படுவதாகவும், அந்த தவறுகளை சரிசெய்யும் செலவை மாணவர்களே ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
“தவறு CBSE-யுடையது. ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்கள். கல்வி சேவையாக இல்லாமல் வணிகமாக மாறும்போது அதன் விலையை மாணவர்களே செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆன்லைன் மதிப்பீட்டு முறையில் பயன்படுத்தப்படும் ‘OnMark’ தளத்தின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு CBSE விளக்கம் அளித்துள்ளது.
அந்த தளத்தில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு அமைப்புகள் மற்றும் ஐஐடி நிபுணர்கள் அடங்கிய இணைய பாதுகாப்பு குழு பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டறியப்பட்ட குறைபாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் எந்தவித பாதுகாப்பு சிக்கலும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் CBSE தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]