சென்னை: தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டும் அரசு ஊழியர் சங்கம், அதை வலியுறுத்தி மார்ச் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்,  சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்,  அன்பரசன், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை, கடந்த அதிமுக அரசு நிராகரித்ததாகவும், தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைத்த திமுக அரசும் இதுவரை நிராகரித்து வருகிறது என்று கூறியவர், தேர்தல் சமயத்தில் ‘கொடுத்த வாக்குறுதிகளை, இதுவரை  நிறைவேற்றாமல் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

தங்களின் (அரசு ஊழியர்களின்)  முக்கிய கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுதல், முடக்கப்பட்ட சரண்டர் தொகையை விடுவித்தல், அகவிலைப்படி வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்ட 3 லட்சம் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மத்திய அரசின் 20மாத நிலுவை ஊதியத்தை வழங்குதல், சாலை பணியாளர்களுக்கு 41 மாதத்தை வேலை மாதமாக ஏற்றல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் பல முன்னெடுப்புகளைச் செய்தும், தமிழ்நாடு  இதுவரை அரசு கண்டுகொள்ளாமல்  இருந்து வருகிறது என்றவர், இதுதொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, 6 முறை சந்தித்தும், தங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக மட்டுமே தெரிவிப்பதுடன், இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்றார்.

இதனால், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, வரும் மார்ச் மாதம் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும், அதனையும் கண்டுகொள்ளாதபட்சத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடைபெறும் என கூறினார்.