சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “எந்தெந்த ரயில்கள் எந்தெந்த நடைமேடையில் வந்துசேரும் அல்லது புறப்படும்” என்ற குரல் அறிவிப்பை இனி கேட்க முடியாது.

150 ஆண்டுகால பழமை வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ‘சைலன்ட் ஜோன்’-னாக மாற்றும் சோதனை முயற்சியை ஞாயிறு (26-2-2023) முதல் தென்னக ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு மாற்றாக விமான நிலையத்தில் உள்ளது போல் பெயர்பலகைகள் மூலம் ஆங்காங்கே அறிவிப்புகளை ஒளிபரப்பவும், நுழைவாயிலில் பிரெய்லி வழிகாட்டி தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

தவிர பிற மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் கியூ-ஆர் கோட் மூலம் சைகை மொழியில் வீடியோ மூலம் அறிவிப்பை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் 46 ஜோடி ரயில்கள் இயக்கப்படும் இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 200 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து செல்கிறது இதனால் இந்த ரயில் நிலையத்தில் மூன்று வாயிலிலும் 24 மணி நேரமும் குரல் அறிவிப்பு ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இந்த புதிய நடவடிக்கை மூலம் இரைச்சல் இல்லாத ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மாறவுள்ளதாக கூறிய அதிகாரிகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக்காக வரும் நாட்களில் மேலும் அதிகமான தகவல் பலகைகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்று கூறியுள்ளனர்.

தவிர, போதுமான வழிகாட்டு உதவி மைய்ய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் 5.3 லட்சம் பேர் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் இதுநாள் வரை தமிழில் ஒலிபரப்பான அறிவிப்பு குரலுக்கு சொந்தக்காரர் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளரும், டப்பிங் ஆர்டிஸ்டுமான கவிதா முருகேசன் என்பவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய முயற்சிக்கு பயணிகள் இடையே வரவேற்பு இருந்தபோதும், ரயில் பயணிகளை விமான பயணிகளுடன் ஒப்பிட்டு குரல் அறிவிப்பை நிறுத்துவது ஏற்புடையதாக இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.