கூடலூர்

கூடலூர் அருகே ஒரு வீட்டுக்குள் சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது.  இது யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட
வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. எனவே கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ மதுரை கிராமப் பகுதியில் வனவிலங்குகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

ஸ்ரீ மதுரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சேமுண்டி கிராம பகுதியைச் சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஆட்கள் இல்லாத வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நேற்று மதியம் புகுந்துள்ளது. வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதை அறியாமல் விருமன் என்பவர் தனது உடைமைகள் மற்றும் வேளாண் உபகரண பொருட்களை எடுக்கச் சென்றுள்ளார்.

அந்த வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை முதியவரை மிகுந்த ஆக்ரோசத்துடன் தாக்க முயன்றுள்ளது. விருமன் சிறுத்தையிடமிருந்து தப்பித்து சிறுத்தையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் இரவில் அந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.