கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலம் மறைமுக கணக்கெடுப்பு நடப்பதாகவும், அதற்காக யாரும் தகவல்களை அளிக்க வேண்டாம் எனவும் மக்களை அறிவுறுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது, “பாரதீய ஜனதாவின் பெயரைக் குறிப்பிடாமல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கே நேரடியாக வந்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

அரசின் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்புகளுக்கு யாரும் தங்களின் விபரங்களை அளிக்க வேண்டாம். தற்போது தொலைக்காட்சி செய்தியில் பார்த்தபோது ஹப்ராவில் உள்ள நகைக்கடையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 15 பேர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான ஆவணங்களை காட்ட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இதனை செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? அப்படி கேட்பவர்களை விரட்டுங்கள். அவர்கள் மாநில அரசிடமிருந்து வருவதாக கூறினால் நம்பாதீர்கள்” என்றுள்ளார் மம்தா பானர்ஜி.

இதனிடையே நகைக்கடையில் ஆவணங்களைக் கேட்டவர்கள் மீது ஹப்ரா போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.